ஆதார், பான் கார்டு இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – ஆன்லைனில் செய்வது எப்படி?
நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஆதார் – பான் இணைப்பு:
வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய பான் எண்ணும், எல்பிஜி மானியம், உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசாங்க திட்டங்களிலிருந்து பண பலன்களைப் பெற ஆதார் எண்ணும் பயன்படுத்தப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்து. முன்னதாக மார்ச் 31ம் தேதி வரை இதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் ஊரடங்கு அமலில் உள்ளதால் இதற்கான கால அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை மத்திய அரசு நீடித்துள்ளது.
இந்த கால அவகாசத்திற்குள் இணைக்க தவறினால் ரூ.1,000 அபராதமாக விதிக்கப்படும். மேலும் அவர்களின் பான் கார்டு செயல்படாது. புதிய வழிகாட்டுதல்கள் வருமான வரிச் சட்டம் 1961 இன் புதிய பிரிவின் (பிரிவு 234 எச்) கீழ் வந்துள்ளது, இது சமீபத்தில் நிதி மசோதா 2021 நிறைவேற்றப்பட்டபோது சேர்க்கப்பட்டது. வருமான வரித்துறை தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.
ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்கும் முறை:
567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமும், இணையதள சேவையின் மூலமும், அல்லது பான் சேவை மையத்தில் ஒரு குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி வழங்குவதன் மூலமும் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க முடியும்.
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் முறை 1:
- வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளமான www.incometaxindiaefiling.gov.in க்கு செல்ல வேண்டும்.
- வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ஆதார் இணைப்பு’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது ஒரு புதிய பக்கத்தில் “நீங்கள் ஏற்கனவே இணைப்பு ஆதார் கோரிக்கையை சமர்ப்பித்திருந்தால் நிலையைக் காண இங்கே கிளிக் செய்க” என்று காண்பிக்கும், அதனை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்கள் ஆதார்-பான் நிலை இணையதளத்தில் காண்பிக்கப்படும்.
- இதுவரை இணைக்காத நிலையில், பான்-ஆதார் அட்டையை இணைக்க அதே பக்கத்தில் கிடைக்கும் படிவத்தை நிரப்ப வேண்டும்.
எஸ்எம்எஸ் மூலமாக இணைப்பை சரிபார்க்கும் முறை 2:
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, இடம் விட்டு, 10 இலக்க பான் எண்ணைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
- இந்த எஸ்எம்எஸ் ஐ 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
- இதற்கான பதில் எஸ்எம்எஸ் ல் நமது இணைப்பின் நிலை பதிலாக வரும்.