பான்-ஆதார் இணைப்பு: பான்-ஆதார் இணைப்புக்கான கடைசி தேதிக்கான கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. இதன் காலக்கெடு நெருங்கி வருகிறது. மார்ச் 31, 2023க்குள் ஒருவர் தனது ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், அவருடைய பான் கார்டு செயலிழந்துவிடும். அதாவது அவர் தனது பான் கார்டை பயன்படுத்த முடியாது. மேலும் கடந்த ஆண்டு முதல் பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்து வருவதால், அதற்கான அபராதத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இரண்டையும் இணைத்து விட்டால், உங்கள் பான் கார்டு செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
முடங்கிய பான் கார்டைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
ஒரு வேளை ஒரு நபர் தனது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இணைக்காமல், அந்த நபர் தனது பான் கார்டைப் பயன்படுத்த முயற்சித்தால், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரூ. 1,000 முதல் ரூ, 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அப்படி பயன்படுத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆகையால், 31 மார்ச் 2023 என்ற தேதியை நினைவில் கொண்டு, இந்த பணியை இன்னும் நீங்கள் செய்யவில்லை என்றால், கண்டிப்பாக செய்து முடிக்கவும்.