smkteam

‘குவியல் குவியலாக சடலங்கள்’ – ரஷ்ய படைகளின் மனித உரிமை மீறல்

ரஷ்ய படைகள் தாக்கிய பகுதிகளில் குவியல் குவியலாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுக்கியுள்ளார்.

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இதனைத் தொடர்ந்து ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பித்து ஓடினர்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே கார்கிவ் நகரத்தில் ரஷ்யப் படைகள் பின்தங்கி இருந்தன. அதாவது, சுமார் 6,000 சதுர கிலோ மீட்டருக்கு ரஷ்ய படைகள் பின்தங்கியுள்ளன. இதனால், 6 மாதங்களுக்குப் பிறகு கார்கிவ் மீண்டும் உக்ரைனின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.

இந்த நிலையில், கார்கிவின் இசியம் பகுதிகளில் ரஷ்யா செய்த அட்டூழியத்தை உக்ரைன் அரசு கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இசியம் காட்டுப் பகுதிகளில் பல சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 450 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குழியிலும் 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ பதிவில் பேசும்போது, “ரஷ்யா எல்லா இடங்களிலும் சடலங்களை விட்டுச் சென்றுள்ளது. இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டும். ஒரே இடத்தில் 450 சடலங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதில் ராணுவ வீரர்களும் அடக்கம்” என்றார்.

இந்த நிலையில், மனித உரிமை அமைப்பின் உறுப்பினர்கள் விரைவில் உக்ரைனில் ஆய்வு மேற்கொள்ளும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *